திருப்பூர் மாவட்ட அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு மதிய உணவில் வழங்கப்பட இருந்த அனைத்து முட்டைகளும் கெட்டு போயிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய மதிய உணவில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 5 நாட்களிலும், அங்கன்வாடி மையத்தில் 3 நாட்களிலும் முட்டைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள அங்கன்வாடிக்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று இந்த அங்கன்வாடியில் உள்ள சமையல் ஊழியர்கள் குழந்தைகளுக்கு மதிய உணவை தயாரித்தனர். அப்போது முட்டைகளை அவிப்பதற்காக கழுவிய போது துர்நாற்றம் வீசிய நிலையில் அனைத்து முட்டைகளும் கெட்டுப்போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தனர். பின்னர் குழந்தைகளுக்கு வழங்கப்படவிருந்த முட்டைகள் நிறுத்தப்பட்டது.
இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுவளவு, பூம்புகார் உள்ளிட்ட ஊராட்சிகளில் இயங்கி வரும் அரசு பள்ளியில் சப்ளை செய்யப்பட்டிருந்த முட்டைகள் அனைத்தும் கெட்டுப்போயிருந்தது தெரிய வந்தது. இதனால் அங்குள்ள அரசுப்பள்ளிகளிலும் முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்கன்வாடி மாவட்ட அதிகாரி கூறுகையில், ‘கடந்த வாரம் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளில் பெரும்பாலும் கெட்டுப்போயுள்ளன. தகவல் அறிந்த ஊழியர்கள் அந்தந்த அங்கன்வாடி மையங்களிலிருந்து புகார் தெரிவித்து வருகின்றனர். கெட்டுப்போன முட்டைகளை வழங்கியவர்களே நல்ல முட்டைகளை திருப்பித் தருவார்கள்’ என கூறினார்.