அகில இந்திய வானொலிக்கு பதிலாக ‘ஆகாஷ்வாணி’ என்று இந்தியில் பயன்படுத்தும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பாஜக அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இதுதவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தற்போது அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அலுவல் சார்ந்த கடிதங்களில், இனி ஆல் இந்தியா ரேடியோ என்று பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்று தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்த இந்தி திணிப்பிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருக்கு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “அகில இந்திய வானொலியை ‘ஆகாஷ்வாணி’ என்று இந்தியில் மட்டும் பயன்படுத்தும் உத்தரவு தேவையில்லாத ஒன்று . தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில வானொலிகளில் அகில இந்திய வானொலி, ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
மாநிலச் செய்திகளில் அகில இந்திய வானொலி என்றும், ஆங்கில செய்திகளில் ஆல் இந்தியா ரேடியோ என்றும் பயன்படுத்தப்படுகின்றன. வானொலி என்பது ஆகாஷ்வாணி என்ற வார்த்தையின் தமிழ் சொல்லே ஆகும் . இதை மாற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தேவையில்லாதவை.
ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாட்டில் பொதுமக்கள் இடையேயும், அரசியல் கட்சியினர் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தலையிட்டு, முன்பிருந்த நிலையே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.