ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு விளம்பரத்திற்காக பிப்ரவரி 2019 முதல் ரூ .4.61 கோடிக்கு மேல் செலவழித்து, அதிகம் செலவிடும் விளம்பரதாரர்களின் பட்டியலில் பாஜக முதல் இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மோடி அரசு ஃபேஸ்புக் பக்கங்களில் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றது. அந்த ஃபேஸ்புக் பக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனத்திற்கு விளம்பரம் கொடுத்து வருகிறது பாஜக அரசு.
இந்நிலையில் கடந்த 18 மாதங்களில் அதிக விளம்பரம் கொடுத்த டாப் 10 விளம்பரதாரர்களின் பட்டியலில் பாஜக முதல் இடத்தில் உள்ளது. கடந்த 18 மாதங்களில் ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 4.61 கோடி ரூபாய் பாஜக செலவு செய்துள்ளது.
மேலும் டாப் 10 விளம்பரதாரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அடுத்ததடுத்த 4 பக்கங்களும் பாஜகவின் ஆதரவு பக்கங்களாகவும், தொடர்பு பக்கங்களாகவும் உள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.
அதில், Bharat ke Mann ki Baat என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.2.24 கோடியும், My First vote for modi என்ற பக்கம் கடந்த 18 மாதங்களில் ரூ.1.39 கோடியும், Nation with Namo என்ற ஃபேஸ்புக் பக்கம் ரூ.1.28 கோடியும் விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது.
மேலும், இந்த 3 விளம்பரதாரர்கள் பாஜக தேசிய கட்சி அலுவலகத்தின் முகவரியை குறிப்பிட்டுள்ளனர். இதில் My First vote for modi, Bharat ke Mann ki Baat ஃபேஸ்புக் பக்கங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 மாதங்கள் முன்பு தான் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பாஜக மற்றும் அதன் தொடர்புடைய 4 ஃபேஸ்புக் பக்கங்களின் விளம்பர செலவு, ஃபேஸ்புக்கின் மொத்த விளம்பரத்தில் 64% ஆகும். இதனையடுத்து பாஜகவினர் முகநூலில் அதிகம் செலவு செய்து மக்களிடையே உண்மையை மூடி மறைப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக இந்திய ஃபேஸ்புக் நிர்வாகம் ஆளும் பாஜக மோடி கட்சியைச் சேர்ந்த சிலர், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் பேசும் வெறுப்புப் பேச்சுகளை வேண்டுமென்றே கண்டுகொள்வதில்லை, தடை செய்வதில்லை என அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் கடந்த 14ம் தேதி செய்திக் கட்டுரை வெளியிட்டு சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்; நேரில் ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்