ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயலினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவான பானி  புயல், நேற்று முன்தினம் காலை ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடலோர பகுதியில்  கரையை கடந்தது.
 
அப்போது மணிக்கு 200 முதல் 250 கிமீ வரை பலத்த காற்று  வீசியது. இதில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, மேற்கூரைகள் பறந்தன.  இதனால், மக்களின்  இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.
 
பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மீட்புப்  பணி தீவிரமாக நடக்கிறது.கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகவும் அபாயகரமான  புயலாக பானி கருதப்பட்டது.
 
இருப்பினும், இதன் தாக்குதலில் பெரியளவில்  உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது பெரும் பாராட்டை பெற்றுள்ளது.  ஐநா.வின் பேரழிவு குறைப்பு முகமையும் இதற்காக ,ஒடிசா பட்னாயக் மாநில அரசுக்கு  பாராட்டு தெரிவித்துள்ளது.
 

அது வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயல் ஒடிசாவை தாக்கியபோதும், அரசின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 
 
புயல் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த மிகவும் துல்லியமான  கணிப்பால் இது சாத்தியமாகி இருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் ஃபானி புயலால் ஒடிஸா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.