தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்து ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இதுகுறித்து தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததால், டிசம்பர் 4-ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பு அறிவித்தது.
 
இந்நிலையில் கடந்த நவம்பர் 30-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்தது. அரைநாள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ நாளை காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக இருந்தது.
 
ஆனால் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரைக் கிளையில் லோகநாதன் என்பவர் சார்பில் இன்று காலை முறையீடு செய்யப்பட்டது.
 
டிசம்பர் 10ம் தேதி அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று தனது மனுவில் லோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.
 
சென்னையில் தொடரப்பட்ட முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மதுரைக் கிளையில் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 
அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
 
அப்போது இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையினை விரைவில் சமர்ப்பிப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்க இயலுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
 
அதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு தெரிவிப்பதாக, ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
இதனையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக பிற்பகல் 1 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
 
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் யோசனையை ஏற்று வேலை நிறுத்தத்தை டிசம்பர் 10-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவித்துள்ளனர்.