தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணி குறித்த விவரங்களை தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் குறைந்தது 3 முறையாவது கட்டாயம் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் தங்களது குற்றப் பின்னணி குறித்த தகவல்களை தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் குறைந்தது 3 முறையாக விளம்பரங்களாக கட்டாயம் வெளியிட வேண்டும். இதேபோல், அரசியல் கட்சிகளும் தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை விளம்பரங்களாக வெளியிட வேண்டும்.

இதே தகவலை திருத்தப்பட்ட வேட்பாளர் படிவத்திலும் (26) வேட்பாளர்கள் நிரப்ப வேண்டும். தாங்கள் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் குற்றப் பின்னணி குறித்த தகவல்களையும், எவ்வளவு கிரிமினல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதை வேட்பாளர்கள் தெரியப்படுத்த வேண்டும். இந்த விவரங்களை அரசியல் கட்சிகள் தங்களது இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை அரசியல் கட்சிகள் செயல்படுத்தவில்லை எனில், அந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது கட்சிகள் முடக்கப்படும்.

வேட்பாளர்கள் தாங்கள் பத்திரிகைகளில் கொடுத்த விளம்பரங்களின் நகல்கள், தொலைக்காட்சிகளில் கொடுத்த விளம்பர காட்சிகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.

இதேபோல் அரசியல் கட்சிகளும் முழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்றம் முன்பு பிறப்பித்த தீர்ப்பில், வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தபிறகு, தங்களது குற்றப்பின்னணி குறித்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும்; இவ்வாறு விளம்பரம் கொடுப்பது, தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவுகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு ஆகும் செலவுத் தொகையை, வேட்பாளர்கள் தங்களது சொந்த பணத்தில் இருந்து அளிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி பதிலளிக்கையில், இது தேர்தல் தொடர்பான செயல்தான். ஆதலால் அந்த செலவுக்கு வேட்பாளர்தான் பொறுப்பு என்றார்.