7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி டிசம்பர் 4 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்று ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழு தற்போதுதான் அறிக்கை வழங்கியுள்ளது.
 
கடுமையான நிதிச்சுமை இருந்தாலும், அரசு ஊழியர்களுக்கு அவ்வபோது அகவிலைப் படியை வழங்கி வருவதாகவும், ஊதிய உயர்வுக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பெற்று, அதை விரைவில் அமல்படுத்த வேண்டியிருப்பதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.
 
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருவகிறது. அந்த பணிகள் தொய்வு ஏற்படாமல் இருக்க அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து, அதை அரசு செயல்படுத்தும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாமல், மக்கள் பணியை தொடர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதனிடையே பல முறை இப்படி வாக்கு தந்தும் அதிமுக எடப்பாடி பழனிசாமியின் அரசு அதை நிறைவேற்றமால் இருந்ததை சுட்டி காட்டி .,   டிச. 6-ம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை. பேச்சு நடத்தாவிடில் டிச.7 முதல் போராட்டம் தீவிரமடையும் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது