செப்டம்பர் 7ம் தேதி முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணையில் பங்கேற்கும் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்து ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டன.

அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தன. வழக்கறிஞர்கள் கறுப்பு கோட், கவுன் அணிவதை தவிர்த்து, சாதாரண உடைகளை அணிந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலான வழக்கு விசாரணைகளில் பங்கேற்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் வரும் செப்.7 முதல் 6 அமா்வுகளில் நேரடி விசாரணை நடத்த உயா்நீதிமன்ற நிா்வாகக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவாமல் தடுக்க மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் கோரிக்கை ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டது.

அதில், நேரடி விசாரணையின் போது, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கறுப்பு கோட், கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்குமாறு மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர்கள் செப்டம்பர் 7 முதல் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய தேவையில்லை, வெள்ளை சட்டையுடன் நெக் பேண்ட் மட்டும் அணிந்து நேரடி விசாரணைக்கு ஆஜராகலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கு பதிலாக FAU-G கேம்மை அறிமுகப்படுத்திய அக்சய் குமார்