லக்கிம்பூர் போராட்டத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நாளைக்குள் (8-10-2021) அறிக்கை தாக்கல் செய்ய பாஜக யோகி ஆதித்யநாத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரிக்கு வந்த ஒன்றிய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில், 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர், பலர் படுகாயமடைந்தனர். முதலில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக பாஜகவினர் கூறிவந்த நிலையில், காங்கிரஸின் பிரியங்கா காந்தி அதிரவைக்கும் விவசாயிகள் மீதுகார் ஏற்றும் காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டார்.

விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடே கொந்தளித்து வரும் சூழலில், இந்தச் சம்பவத்தில் தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி வருகிறார். மேலும் நேற்று (6-10-2021) அஜய் மிஸ்ரா டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இதற்கிடையில் 2 நாட்களாக தடுப்புக் காவலில் இருந்த பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியுடன் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் மற்றும் பஞ்சாப் துணை முதல்வரும் கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் விவசாயிகள் 4 பேர், ஒரு பத்திரிகையாளர் உள்பட 9 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்தை யோகி ஆதித்யநாத் அரசின் காவல்துறை கையாளும் விதம் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உ.பி. காவல்துறையினர் இதுவரை ஒன்றிய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

இதனால் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. ஒன்றிய அமைச்சர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதால் விசாரணை முறையாக நடைபெற வாய்ப்பில்லை. இதனால் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (7-10-2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ” உத்தரப் பிரதேச அரசு லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்த அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில் இதுவரை செய்யப்பட்டுள்ள வழக்குப்பதிவு, கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்” என்று பாஜக யோகி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணை நாளை (8-10-2021) நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

அதற்கு உ.பி. அரசு வழக்கறிஞர் பதில் அளிக்கையில், “லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைைமயில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “எங்களுக்கு வந்த புகாரே விசாரணை முறையாக நடக்காது, முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்று தானே வந்துள்ளது” எனத் தெரிவித்து வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியானதும் உத்தரப் பிரதேச பாஜக யோகி அரசு அவசர அவசரமாக லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஆணையம் அமைக்கப்படுவதாகவும், ஆணையம் இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் உத்தரப் பிரதேச தலைமைச் செயலர் அவனிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.