ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்ற விசாரணையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தியை இணைக்க கூடிய மணற்திட்டுகள் அல்லது சுண்ணாம்பு பாறைகள் ஒரு தொடர்ச்சியாக இருக்கின்றன. இது ஒரு பாலம் போன்ற தோற்றத்தைக் கொண்டது. இதுதான் ஆடம் பாலம், ஆதாம் பாலம், ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படுகிற கடவுள் ராமர் கட்டிய பாலம் இது என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இந்நிலையில் தமிழ்நாட்டில், இந்த மணற்திட்டு பகுதியை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கால்வாய்தான் சேது கால்வாய் அல்லது சேது சமுத்திர திட்டம் எனப்படுகிறது.

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முயற்சித்தது. ஆனால் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள், ராமர் கட்டிய பாலத்தை இடித்து சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதா என எதிர்ப்பு தெரிவித்தன. 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் சேது கால்வாய் திட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, ராமர் பாலம் ஒரு புராதன சின்னம் என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்டகாலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அறிவித்தது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு, சேது கால்வாய் அல்லது சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இந்நிலையில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று (19.01.2023) தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுப்பிரமணிய சுவாமி தரப்பில் கூறும்போது, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இழுத்தடிக்கப்படுகிறது என்றனர்.

இவ்வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ஒன்றிய அரசின் இந்த பதிலை ஏற்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரப்படும் வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மேலும் ஒன்றிய அரசு எடுக்கும் முடிவில் நிவாரணம் தேவையென்றால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகவும் அனுமதி அளித்தனர்.