இந்திய ரூபாயில் லட்சுமி மற்றும் விநாயகர் ஆகிய இந்துக் கடவுள்களின் படங்களை உடனடியாக அச்சிட வேண்டும், இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் ஆதரவு அமோகமாக உள்ளது என பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை ஒரு பக்கமும் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை மறுபக்கமும் அச்சடிக்க வேண்டும். தெய்வங்களின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது நாடு செழிக்க உதவும்.

விநாயகர் மற்றும் லட்சுமி படங்களை ரூபாய் நோட்டுகளில் கொண்டு வந்தால் ஒட்டு மொத்த நாடும் அதனால் ஆசிகளைப் பெறும். கடவுள் ஆசி இல்லை என்றால் நம் முயற்சிக்கு சில சமயங்களில் பலன் இருக்காது. இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை.

இந்தோனேசியாவில் இதைச் செய்துள்ளார்கள். அவர்களின் ரூபாய் நோட்டுகளில் விநாயகரின் உருவம் உள்ளது” எனக் கூறியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் கடும் கண்டனங்களையும் மற்றொரு தரப்பினர் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ரூபாயில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்களை உடனடியாக அச்சிட வேண்டும், இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் ஆதரவு அமோகமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “நாட்டின் 130 கோடி மக்கள் இந்திய நாணயத்தின் ஒருபுறம் காந்திஜியின் படமும், மறுபுறம் ஸ்ரீ கணேஷ் ஜி மற்றும் லட்சுமி ஜியின் படமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இன்று நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் வளரும் மற்றும் ஏழை நாடுகளில் இந்தியா கணக்கிடப்படுகிறது. இன்றும் நம் நாட்டில் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள்.

ஒருபுறம், நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும், மறுபுறம் நமது முயற்சிகள் பலனளிக்க இறைவனின் ஆசீர்வாதமும் தேவை. சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் இவைகளின் சங்கமத்தின் மூலம் மட்டுமே நாட்டை முன்னேற்றும்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக கோரினேன். அப்போதிலிருந்து, இந்த பிரச்சனைக்குப் பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. இதுகுறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம் உள்ளது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

‘ஊழல் எதிர்ப்பு’ என்ற ஒற்றை கோஷத்துடன் அரசியல் களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவால், கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவா அரசியலை கையில் எடுத்து வருகிறார். குறிப்பாக 2021 மார்ச்சில், டெல்லியில் ராம ராஜ்ஜியம் அமைப்பதே தனது குறிக்கோள் என பகிரங்கமாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன் பிறகு, அயோத்தியா ராமர் கோயிலுக்கு முதியவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி உருவப்படங்களை அச்சிட வேண்டும் எனப் பேசியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதசார்பற்ற கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.