சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் இரட்டைக் கொலை தொடர்பான வழக்கில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, கோவில்பட்டி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இந்நிலையில் சாத்தான்குளம் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவலர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க: நீதிபதியை மிரட்டிய போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் வழக்கில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் (இன்று ஜூலை.01) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். எஸ் ஐ ரகுகணேஷ் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர். ஆனால் இவரை சிபிசிஐடி போலீசார் திருச்செந்தூரில் உள்ள ஆத்தூரில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் 5 காவலர்களை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறார்கள். தற்போது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னதாக சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற முதல்வர் பழனிசாமி அரசு பரிந்துரைத்தது. ஆனால், சிபிஐ. தனது விசாரணையைத் துவங்க நாட்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாகவே சிபிசிஐடி தனது விசாரணையைத் துவங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.