மகாராஷ்டிர மாநிலம் அனைத்து ஜில்லா பரிக்ஷத் பள்ளிகளிலும் பிரதமர் நரேந்தி மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை செப்டம்பர் 18 ஆம் தேதி கட்டாயமாகத் திரையிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அனைத்துப் பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், பள்ளிகளில் திரையிடலுக்குத் தேவையான லேப்டாப், டெஸ்க்டாப், வைஃபை, போன்ற வசதிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பற்றி எடுக்கப்பட்ட ‘Chalo Jeete Hain’ என்ற ஆவணப்படம் செப்டம்பர் 18 ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. இது அவரது குழந்தைப் பருவத்தை அடிப்படையாக வைத்து, தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் ஹடாவேல் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது.

மோடியின் போராட்டங்களைச் சித்தரிக்கும் இப்படம் தன்னலமற்ற தொண்டு மற்றும் தியாகத்தை வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மும்பையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இது குறித்து சில ஆசிரியர்களிடம் கேட்டபோது, இந்தப் படத்தைத் திரையிடுவது மோடியின் தேர்தல் பிரச்சார உத்திதான் எனவும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மோடி பற்றிய திரைப்படம் மாணவர்களை நாட்டிற்காக தொண்டு செய்ய தூண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பாஜக எம்.எல்.ஏ. கபில் பாட்டில், “அரசு இப்படத்தை பள்ளிகளில் திரையிடலாம். ஆனால் அது பள்ளி மற்றும் மாணவர்களின் கல்விக்கு பயன்படுவதாக இருக்க வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.