மோசடி வழக்கில் கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் இன்று (5.1.2022) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மேலும் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி உள்ளிட்ட 3 பேர் இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டனர் என புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

17.12.2021 அன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

இதனையடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி தரப்பில் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என மற்றொரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் இன்று (5.1.2022) அதிரடியாக அவரை கைது செய்தனர்.

சுமார் 20 நாட்கள் கழித்து பிடிபட்ட ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் ராஜேந்திர பாலாஜி அதிமுகவைச் சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள் தனக்கு உதவி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.