மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும் எனக் கூறிய பாஜக ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை நாசிக் காவல்துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் பாஜக அரசின் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்ற விவரம் கூட மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தெரியவில்லை.

சுதந்திர தின உரையின் போது, எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் என்பதை முதல்வர் மறந்துவிட்டார். உரையின் பாதியில், தனது உதவியாளரிடம் அதனை கேட்டு தெரிந்து கொண்டார். இது அவமானமாக உள்ளது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் அறைந்திருப்பேன்” என்று ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கூறினார்.

இதனைத் தொடர்ந்து மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நாராயண் ரானேவை கண்டித்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிவசேனா தொண்டர்களும், பாஜகவினரும் மும்பையில் மோதலில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் நாராயண் ரானேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் மற்றும் புனே காவல் நிலையங்களில் சிவசேனா கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை இன்று (ஆகஸ்ட் 24) பதிவு செய்யப்பட்டது.

[su_image_carousel source=”media: 25849,25851,25850″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நாசிக் காவல்துறையினர், அவரை கைது செய்து ரத்னகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து, சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று இரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன் நாராயண் ரானேவை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் ரானேவுக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் ஒன்றிய அமைச்சரான நாராயண் ரானேவை மஹாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்காக ஒன்றிய அமைச்சரை மாநில அரசு கைது செய்துள்ளது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலியல் சர்ச்சையால் பதவி விலகிய பாஜக கே.டி.ராகவன்; கைது செய்யக்கோரி பெண் எம்.பி. புகார்