இந்தியாவின் மிக ஆடம்பர திருமணமாக முகேஷ் அம்பானியின் இல்லத் திருமணம் இன்று நடைபெறுகிறது. அவரது மகள் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிராமலுக்கும் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதற்காக மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட அன்டில்லா இல்லம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. திருமணத்திற்கு முன்பான நிகழ்ச்சிகள் உதய்பூரில் நடந்து முடிந்துள்ளது. அதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக அமெரிக்க பாப் பாடகி பேயான்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இஷா அம்பானி திருமணச் செலவு மட்டும் ரூ.720 கோடிக்கும் அதிகமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய திருமண நிகழ்வில், அனில் அம்பானி, அமீர் கான், கிரண் ராவ் உள்ளிட்டோர் அன்டில்லா இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சென்றுள்ளனர். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரமும் சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.