சமூகப் போராளி முகிலன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கவிஞர் தாமரைக்கு எதிராக, பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொண்டு வரப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து வீடியோ ஆதாரங்களை செய்தியாளர்கள் முன்பு வெளியிட்டார்.

அன்று இரவு முதல் முகிலன் காணாமல் போனார். இதையடுத்து 140 நாட்களுக்கு பின், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் மீட்கப்பட்டார். அவரைச் சென்னை அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முகிலன் உயிருடன் மீட்கப்பட்டதற்கு, பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கவிஞர் தாமரை, முகிலன் குறித்து கருத்தைக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, சமூகப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் அனைத்து ஆண்களுமே பொம்பளப் பொறுக்கிகள் தான். இதுபோன்ற போலி போராளிகளை நிறைய பார்த்தாகி விட்டது.

பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டார். தற்போது வெளியே வந்திருக்கும் அன்னாரை, நீங்கள் வேண்டுமென்றால் மாலை போட்டு வரவேற்கலாம். ஆனால் எங்களிடம் இருந்து செருப்பு தான் கிடைக்கும். இன்னொரு தியாகு அவ்வளவு தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் தாமரையின் இந்த கருத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.