சென்னை அருகே பெருங்குடியில் மாநகராட்சியின் குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி ஒரு சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் இரு கால்கள், வலது கை ஆகியவை கிடந்தன.
 
மேலும் அந்த பெண்ணின் வலது கையில் சிவன், பார்வதி படமும், ஒரு டிராகன் படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது.
 
இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதற்காக தமிழகம், ஆந்திரம்,கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் காணாமல்போன பெண்கள் குறித்த தகவல்களைத் திரட்டினர்.
 
மேலும் அந்தப் பெண் வலது கையில் குத்தப்பட்டிருந்த படங்கள் குறித்து பச்சை குத்துபவர்களிடம் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் (51) மனைவி சந்தியா (38) காணாமல் போயிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
 
இது தொடர்பாக அவர்கள், காவல் நிலையத்தில் புகார் செய்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் பகுதியைச் சேர்ந்த சந்தியாவின் பெற்றோரிடமும், பாலகிருஷ்ணனிடமும் போலீஸார் விசாரணைசெய்த போது முரணான தகவல்கள் கசிந்ததால்
 
குறிப்பாக, பாலகிருஷ்ணன், தனது மனைவி சந்தியா பச்சை குத்தவில்லை எனக் கூறினார். ஆனால் சந்தியாவின் பெற்றோர்,பெருங்குடியில் கண்டெடுக்கப்பட்ட கையில் குத்தப்பட்டிருந்த பச்சையை, தனது மகளும் கையில் குத்தியிருந்ததாகக் தெரிவித்தனர்.
 
இதன் விளைவாக குழப்பம் அடைந்த  போலீஸாருக்கு பாலகிருஷ்ணன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
 
இதையடுத்து போலீஸார் பாலகிருஷ்ணனை ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தனர்
 
அதேபோல கடந்த ஒரு மாதமாக பாலகிருஷ்ணன், சந்தியா ஆகியோரது செல்லிடப்பேசி பேச்சு விவரங்களைத் திரட்டி போலீஸார் ஆய்வு செய்தனர்.
 
இதில் சந்தியாவுடன் பாலகிருஷ்ணன் கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக செல்லிடப்பேசியில் பேசியிருப்பதும், அதன் பின்னர் சென்னை ஜாபர்கான்பேட்டை பாரிநகர் காந்தி தெருவில் உள்ள வீட்டில் இருவரும் சேர்ந்து இருந்திருப்பதும், 19-ஆம் தேதி சந்தியாவின் செல்லிடப்பேசி, பாலகிருஷ்ணன் வீட்டில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
 
இதனால் பாலகிருஷ்ணன் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்ததால், அவரை செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரணை செய்தனர்.
 
விசாரணையில், பாலகிருஷ்ணன் தனது மனைவி சந்தியாவை கொலை செய்து 7 துண்டுகளாக வெட்டி 4 பார்சலாகப் பிரித்து ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளிலும், அடையாறு பகுதிகளிலும் வீசியதை ஒப்புக் கொண்டார்.
 
இதையடுத்து போலீஸார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
 
அப்போது அவரை பிப்ரவரி 19ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து பாலகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
 
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மனைவி சந்தியாவை தாம் கொல்லவில்லை என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது .காரணம் சந்தியாவின் தலை இதுவரை கிடக்காத நிலையில் இந்த வழக்கு மேலும் பல சட்ட சிக்கல்களை எற்ப்படுத்தும் என சட்ட வல்லுனர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்