தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அங்கீகரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க முடியாமல் வேலையின்றி சொல்லப்படாத துயரங்களுக்கு ஆளாகினர். மேலும் முறையாக விண்ணப்பித்தவர்களால் இ-பாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் ரூ.500 முதல் ரூ.2,000 வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள் இ-பாஸ்கள் வழங்கியது சர்ச்சையாகி, அதிமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும், மக்கள் பயணத்திற்கு ஒரு செயற்கைத் தடையை உருவாக்க வேண்டாம், தமிழகத்தில் இ-பாஸ் வழங்குவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் செய்தி அறிக்கைகளை மேற்கோள் காட்டி,

தேவையற்ற நிபந்தனைகளைப் போட்டு மக்களைத் தொந்தரவு செய்வது மனிதாபிமானமற்றது என்றும், எனவே மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கான இ-பாஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வாசிக்க: ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் இ-பாஸ்க்கு லஞ்சம் வாங்கும் அதிமுக அரசு: உயர்நீதிமன்றம்

இந்நிலையில், தமிழக அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட அறிவிப்பில், மாநில அரசு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

தொலைபேசி எண்கள் மற்றும் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டுகளின் விவரங்களுடன் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக அங்கீகரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இ-பாஸ் கட்டாயமில்லை என்று மத்திய அரசே அறிவித்துள்ளபோது, அதிமுக அரசாங்கம் தொடர்ந்து ஒரு உள்நோக்கத்துடன் அதை வைத்திருப்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் தினசரி வேலைக்கு செல்லும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வாக இருக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாட்டில் மாவட்டங்களுக்கிடையேயான பயணங்களுக்கு இ-பாஸ் தேவைப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.