கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தமிழக-கேரள எல்லைப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு கிராமம்.

இங்கே ஒரு அரசுப் பள்ளி உள்ளது.அந்தப் பள்ளியில் மலைக் காட்டின் நடுவே உள்ள பில்லூர் அணையை சுற்றி இருக்கும் சுமார் 30 மலைக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தப் பகுதிகளில் முறையான சாலை வசதியோ மின்சார வசதியோ இன்னமும் முழுமையாகப் போய் சேரவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அந்தக் கிராமங்களைச் சேர்ந்த சபிதா,ஷாலினி என்ற இரண்டு மாணவியர் மற்றும் பிரசாந்த் என்ற ஒரு மாணவர் ஐஐடி மற்றும் என்ஐடி கல்லூரிகளில் சேர்வதற்காக இந்திய அளவில் நடத்தப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜெ. இ. இ எனும் Joint Entrance Exam தேர்வுகளில் வென்று சாதித்துள்ளனர்.

இதில் என்ன சாதனை என்று கேட்கிறீர்களா?

ஐஐடி பொறியியல் கல்லூரிகளுக்காக நடத்தப்படும் இந்த ஜெ. இ. இ தேர்வுகள் இங்கிலீஷ் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும்.அதோடு மெயின் மற்றும் அட்வான்ஸ் என இரண்டு தேர்வுகளை எழுதி அதில் தேர வேண்டும்.

அந்த ஜெ. இ. இ நுழைவுத் தேர்வுகளில் தான் கோவையின் மலைக் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவர்கள் வென்றுள்ளனர்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது,இதற்காக அவர்கள் எந்தவிதமான பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லவில்லை என்பது தான்.

சகல வசதிகளும் நிரம்பிய சென்னை கோவை டெல்லி போன்ற மாநகரங்களில் இருக்கும் மாணவ மாணவியர் மட்டுமே ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் வெல்ல முடியும்.அதுவும் முறையான கோச்சிங் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற எண்ணத்தை தவிடு பொடி ஆக்கியுள்ளனர்.

இது உள்ளபடியே அபாரமான சாதனை.

இது முழுக்க முழுக்க அந்த மாணவர்கள் மற்றும் அந்த அரசுப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களின் அபாரமான உழைப்பில் விளைந்த சாதனை…

இந்த மில்க்கிவே கேலக்ஸியில் இருந்து பல கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஆல்பா சென்டாரியை ஒரே ஒரு மணி நேரத்தில் அடைந்து விடும் ஒரு வாகனம் கண்டுபிடிக்கப்பட்டால் அது எந்த அளவிற்கு சாதனையாகப் பார்க்கப்படுமோ,

அதைவிட,

பெரிய சாதனை இந்த மாணவர்களின் வெற்றி….

ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்…எந்தத் தேர்விலும் எளிதாக வெல்லலாம்…என்பதை நிதர்சனத்தில் நிருபித்துக் காட்டியுள்ளனர் இந்த மாணவ மாணவியர்கள்.

எழுதியவர் : துரை மோகன்ராஜு , பொறியாளர் , திருநெல்வேலி மாவட்டம்