நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது, தண்டனையை ஏற்க தயார் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஎஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்ததற்கு, உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கினை விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவித்திருந்தது. மேலும் தண்டனைகள் குறித்த தீர்ப்பு இன்று (ஆகஸ்ட் 20) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரசாந்த் பூஷன் தரப்பில், 6 வருடங்களில் உச்சநீதிமன்றம் என்ன செய்து வருகிறது என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும் என்பதில் முக்கியமாக பார்க்கப்படுவது எழுத்து சுதந்திரம்தான். ஆனால் அதுவே மறுக்கப்படுகிறது. இது ஜனாநாயகத்திற்கு விரோதமானது.

இந்த வழக்கில் தண்டனைக்கு தயார். நீதிபதிகள் குறித்த கருத்தில் தற்போதும் தெளிவாக இருக்கிறேன். மன்னிப்பு கேட்க மாட்டேன். சீராய்வு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருக்கும்போது எதற்கு இவ்வளவு அவசரமாக தண்டனை வழங்க முற்படுகிறீர்கள் என கேட்கப்பட்டது.

மேலும், தண்டனை மீதான நீதிமன்ற விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென பிரசாந்த் பூஷன் கோரியிருக்கிறார். இந்நிலையில், தண்டனை விசாரணை குறித்து பூஷனின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பூஷனின் கருத்துகளை அவர் மறுபரிசீலனை செய்துக்கொள்ள அவருக்கு இரண்டு நாட்கள் அவகாசமும் வழங்கியுள்ளது. அதேபோல், கால அவகாசம் முடியும் வரையில் பூஷனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை என்ன என்பது முடிவு செய்யப்படாது என நீதிபதிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.

பூஷனின் ட்வீட்களை வெளியிட்டதற்காக டிவிட்டரும் அவமதிப்பு வழக்கில் சிக்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நீதிமன்றத்திற்கு அளித்த விளக்கத்தினை ஏற்று, நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து ட்விட்டரை விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதியை சிதைக்காதீர்கள்; 1500 வழக்கறிஞர்கள் ஆதரவு கூட்டறிக்கை