மதுரையின் அடையாளங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹாலில், குறும்படங்கள் மற்றும் சினிமா சூட்டிங் நடத்த நிரந்தர தடை விதித்து தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டமான மதுரையின் சிறப்பை போற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்க கூடிய மதுரை திருமலை நாயக்கர் மஹால் 350 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சுதந்திரத்திற்குப் பிறகு திருமலை நாயக்கர் அரண்மனை ஒரு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு தொல்பொருள் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.

அரசர் திருமலை நாயக்கரால் 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய பாணியின் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் அரண்மனை, அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இங்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி வணண்ண விளக்குகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மஹால் சினிமா சூட்டிங் போன்றவைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திரைப்படங்களுக்கான ஷூட்டிங் நடைபெறும் பொழுது நூற்றாண்டு பழமையான மஹாலின் சுவர்கள் மற்றும் தூண்கள் சேதம் அடைவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், திருமலை நாயக்கர் மஹாலில் சினிமா சூட்டிங் நடத்த கடந்த 2011 ஆம் ஆண்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குறும்படம் ஒன்று திருமலை நாயக்கர் மஹால் உட்பகுதியில் எந்த ஒரு அனுமதி இன்றி எடுக்கப்பட்டதாகவும், மேலும் அந்த படத்தில் துப்பாக்கிகள் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.

எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், துப்பாக்கி பயன்படுத்தி பொதுவெளியில் எடுக்கப்பட்ட இந்த குறும்படத்திற்கு எப்படி தொல்லியல் துறை அனுமதி வழங்கியது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் திருமலை நாயக்கர் மஹாலில் எடுக்கப்பட்ட அந்த குறும்படத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்கள், திருமணம் மற்றும் பிறந்தநாள் தொடர்பான போட்டோ சூட்சுகள் எடுப்பதற்கு நிரந்தரமாக தடை விதிப்பதாகவும் மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.