மணிப்பூரில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது.

இந்நிலையில், பழங்குடி ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. மாநிலத்தில் 10 மலை மாவட்டங்களில் இந்தப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது பழங்குடிகளுக்கும் – மேதி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.

இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்த முக்கிய இடங்களில் காவல் துறை குவிக்கப்பட்டது.

மேலும், இணையச் சேவையை 5 நாட்களுக்கு முடக்க மாநில அரசு உத்தரவிட்டது. மோதல் காரணமாக இதுவரை 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் 114 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று வன்முறை நடந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையை மீறுபவர்களாக இருந்து, நிலைமை கட்டுப்படுத்த முடியாததாக மாறுமானால் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்டதும் சுட ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு மணிப்பூர் மாநில ஆளுநர் இன்று (04.05.2023) உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த வன்முறைக்கு பாஜகவின் அரசியலே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனையும் முன்னாள் எம்.பி.யுமான மேரி கோம், இந்த கலவரம் தொடர்பாக வேதனையுடன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். எனது மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது, பிரதமர் அவர்களே தயவுசெய்து உதவுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். வன்முறை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.