போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் அயோத்தியாவின் கோசைகஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.விற்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியதால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள கோசைகஞ்ச் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இந்திர பிரதாப் என்ற கபு திவாரி.

இவர் 1990 ஆம் ஆண்டு அயோத்தியாவில் உள்ள சா ஹேத் டிகிரி கல்லூரியில் படித்துள்ளார். எனினும் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பில் தோல்வியடைந்துள்ளார். ஆனால், கபு திவாரி போலியான மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து பட்டப்படிப்பில் மூன்றாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

இதுதொடர்பான உண்மை தெரியவரவே கபு திவாரி மீது கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை 28 ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 10 அன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், இந்திர பிரதாப் என்ற கபு திவாரி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றால், சம்பந்தப்பட்டவர் பதவி இழக்க நேரிடும் என்பதால், தற்போது கபு திவாரி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.