முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைக்கைதி பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளனை விடுவிக்க வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்ய பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் அவரது தாயார் அற்புதம்மாள் மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 45 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 45 நாள் பரோல் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரம் நீட்டித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிகிச்சைக்கு செல்லும்போது பேரறிவாளனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை; உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு