புதிய பாடத்திட்டம் உருவாக்குவதற்கான அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட அறிக்கையில், மாநில பொதுப்பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் வேலை வாய்ப்பிற்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி,

நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய 3 முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் 3 முதன்மை பாடத்தொகுப்பினையோ அல்லது 4 பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020-21-ம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு இதனை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.

மேற்காணும் சூழ்நிலையில் மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் 3 முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாயப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் சுருங்க நேரிடும் என்பதால், இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல் கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மாணவர்களின் நலன்கருதி, மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையினை இரத்து செய்தும், 2020-21-ம் கல்வியாண்டிலிருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

11,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட அரசாணை ரத்து செய்த தமிழக அரசின் முடிவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: 2ஆம் இடத்தைப் பிடித்த தமிழகம்… சமூக பரவல் இல்லையெனக் கூறும் எடப்பாடி…