பல்வேறு பணிகளுக்காக நிலப்பகுதிகளை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு உள்ளிட்ட ., செயற்கைக்கோள்களை வடிவமைத்து பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.
 
இதையடுத்து, பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் உதவியுடன் `ஹைசிஸ்’ என்ற நிலப்பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள் மற்றும் வணிக ரீதியாக பல்வேறு நாடுகளை சேர்ந்த 30 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வந்தது.
 
இந்நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்ததையடுத்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுன்டவுன் நேற்று முன்தினம் அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியது.
 
அதைத்தொடர்ந்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை நேற்று காலை 9 மணி 57 நிமிடம் 30 விநாடிகளுக்கு இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
 
பூமியில் இருந்து ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடங்கள் 27 வினாடிகளில் இந்திய செயற்கைக்கோளான `ஹைசிஸ்’ அதன் திட்டமிடப்பட்ட 636 கிலோ மீட்டர் உயரத்திலும், 97.957 டிகிரி புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, விண்ணில் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டின் இன்ஜின் 2 முறை நிறுத்தப்பட்டு வெற்றிகரமாக மீண்டும் இயக்கப்பட்டது.
 
இஸ்ரோ தயாரித்த நிலப்பரப்பு கண்காணிப்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கு உதவும் செயற்கைக்கோளான ஸ்ரீஹைசிஸ்’ உட்பட 31 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
 
 
அதன்பின் அமெரிக்காவை சேர்ந்த 23 செயற்கைக்கோள்கள் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, கொலம்பியா, மலேசியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் 7 செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 1 மணி நேரம் 52 நிமிடங்களுக்கு பின், அவற்றின் புவி வட்டப்பாதையில் 504 கி.மீ உயரத்தில், 97.468 டிகிரியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி முடித்தது.
 
இஸ்ரோவினால் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் ஸ்ரீஹைசிஸ்’ செயற்கைக்கோளானது வனப்பகுதி, வேளாண்மையை மேம்படுத்த, கடலோர பகுதி, உள்நாட்டு நீர்நிலைகளை அதிநவீன கேமரா கொண்டு புகைப்படம் எடுத்து கண்காணிக்கும். மண்வளம் சார்ந்த தரவுகளை அனுப்பி விவசாயத்தை மேம்படுத்த உதவும், ராணுவ பணிகளுக்கும் இது பயன்படும்.
 
இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். 31 செயற்கைக்கோள்கள்களும் அதன் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
 
பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ராக்கெட் மூலம் ஹைசிஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோல், வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட 30 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸ்ரீஹைசிஸ்’ செயற்கைக்கோள் சண்டிகரில் உள்ள ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்பட்டது. இதில் அதிநவீன புகைப்பட கருவி பொருத்தப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் பூமியில் உள்ள இடங்களை துல்லியமாக படம்பிடித்து அனுப்ப முடியும். விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் இந்த செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வரும் டிசம்பர் 5ம் தேதி பிரெஞ்சு கயானாவில் இருந்து அதிக எடைகொண்ட ஜி சாட் – 11 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அடுத்து வரும் 20 நாள்களுக்குள் ஜி.எஸ்.எல்.வி ஜிசாட் – 7 ஏ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுகிறது.
 
இஸ்ரோ இதுவரை 20 நாடுகளை சேர்ந்த, 270 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.
 
தற்போது, புவி வட்டப்பாதையில் இஸ்ரோவின் 47 செயற்கைக்கோள்கள் இயங்கி வருகிறது. இந்த ஆண்டின் 6வது செயற்கைக்கோள் இதுவாகும்.
 
அடுத்த ஆண்டு 12 முதல் 14 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் `ரிமோட் சென்சிங்’’ கொண்டு நாட்டின் பாதுகாப்பை ஆராய்ந்து வருகிறது. ‘ஹைசிஸ்’ செயற்கை கோள் தீவிரவாதத்தை கண்காணிக்க விண்ணுக்கு அனுப்பப்படவில்லை. இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.