பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதியின் கருச்சிதைவை நிறுத்துங்கள் என்று நாடெங்குமிலும் இருந்து 1500 வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை விமர்சித்து, சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

வழக்கில், பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

மேலும் வாசிக்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி- உச்ச நீதிமன்றம்

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் பஞ்சு, அர்விந்த் தாதர், ஷியாம் திவான், மேனகா குருசுவாமி, ராஜூ ராமசந்திரன், பிஸ்வாஜித் பட்டாச்சார்யா. நவ்ரோஜ் சீர்வாய், ஜனக் துவாரகதாஸ், இக்பால் சக்லா, டாரியஸ்கம்படா, விரிந்தா குரோவர், மிகிர் தேசாய், காமினி ஜெயிஸ்வால் மற்றும் கருணா நந்தி உள்ளிட்ட 1,500 வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரசாந்த பூஷன் ஒரு சிறந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், அவர் ஒரு சாதாரண நபராக இல்லாமல் இருக்கலாம், அவரது ட்வீட்டர் கருத்துகளும் அசாதாரணவொன்றை வலியுறுத்தவில்லை,

அது சமீபகாலமாக நீதிமன்றத்தின் பணி குறித்து பல்வேறு நபர்களால் தொடர்ந்து பொதுவிலும் சமூக ஊடகங்களிலும் வலியுறுத்தப்பட்டு வரும் கருத்துதான். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் இதே போன்ற கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்திய பார் கவுன்சிலின் உறுப்பினர்களாகிய நாங்கள், திரு.பிரசாந்த் பூஷனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்பார அதிர்ச்சியுடன் பார்க்கின்றோம்.

சுதந்திரமான நீதித்துறை என்பது நீதிபதிகள் ஆய்வு மற்றும் கருத்தில் இருந்து விடுபடுவதாக அர்த்தமல்ல. எந்தவொரு குறைபாடுகளையும் தாராளமாக பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருவது வழக்கறிஞர்களின் கடமையாகும்.

பிரசாந்த் பூஷனின் இரண்டு ட்வீட்களின் ஆலோசனை மற்றும் உள்ளடக்கம் குறித்து நம்மில் சிலருக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் என்றாலும், நீதிமன்ற அவமதிப்பு எதுவும் நோக்கமாகவோ அல்லது செய்யப்படவோ இல்லை என்ற கருத்தை நாங்கள் ஒருமனதாக கருதுகிறோம்.

இந்த தீர்ப்பை இப்படியே நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற கருத்தில் நாங்கள் வலுவாக இருக்கிறோம், இந்த வழக்கை இதைவிட பெரிய அமர்வாக, திறந்தவெளி அமர்வாக, பெருந்தொற்றுக்கு பிறகு மறுவிசாரனைக்குட்படுத்த வேண்டும்.

கடந்த 72 மணி நேரத்தில் இது குறித்து ஒலித்த மக்களின் குரலுக்கு உச்ச நீதிமன்றம் செவி சாய்க்கும் என்றும் நீதி பிறழ்வாமல் இருக்க நடவடிக்கையெடுக்கும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் எப்பொதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மரியாதையையும் மீட்டெடுக்கும் என்றும் நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.