‘பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத் தான் இருக்கனும்’ என கடிதம் எழுதி வைத்து விட்டு கரூரில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகள் (வயது 17), வெண்ணமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள இறந்த மாணவியின் அறையில் சோதனை செய்துள்ளனர்.

சோதனையில் இறப்பதற்கு முன்பு மாணவி எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில், “பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத் தான் இருக்கனும்.. என்னை யார் இந்த முடிவை எடுக்க வச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழன்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்போ பாதிலேயே போகுறேன்.

இன்னோரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனும்னு ஆச ஆன முடியாதில்ல..

ஐ லவ் யூ அம்மா.. சித்தப்பா, மணிமாமா, அம்மு, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நான் உங்க கிட்டலாம் சொல்லாம போறேன் மன்னிச்சிருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி..” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை கைப்பற்றிய வெங்கமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் செல்போனில் வந்த தகவல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அண்மையில், கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக அந்தப் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியும் கைது செய்யப்பட்டனர்.

இந்த தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கரூரில் ஒரு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.facebook.com/savenra/posts/7387439461281913