மாநில உரிமைகளைக் காப்பதில் மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என ராகுல் காந்தி, ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

2022-23 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (1.2.2022) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸின் வயநாடு தொகுதி எம்.பி.யும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, “குடியரசுத் தலைவர் உரை என்பது நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லை. அதற்கு மாறாக அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல் அறிக்கையாகவே உள்ளது.

மோடி ஆட்சியில் இரண்டு இந்தியாக்கள் உள்ளன; பணக்கார இந்தியா, ஏழை இந்தியா என தற்போது நாடு இரண்டாக உள்ளது. நாட்டில் உள்ள பணக்காரர்கள் செல்வமும் அதிகாரமும் மிக்கவராக உயர்ந்துள்ளனர். மேலும் பட்ஜெட்டில் செல்வந்தர்கள், பெருநிறுவனங்களுக்கும் கிடைத்த சலுகைகள், சிறு குறு தொழில்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் நசிந்துள்ளன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 55 கோடி மக்களை விட அதிகம் என்பதை ஏழை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்நாட்டு மக்கள் எப்போதுமே அமைதியாக இருப்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள்.

குடியரசுத் தலைவர் உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய இளைஞர்கள் வேலை கேட்கிறார்கள். ஆனால் உங்கள் அரசால் வேலை கொடுக்க முடியவில்லை. 2021-ல் மூன்று கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. எனவே வேலை வாய்ப்பை உருவாக்குவதாக ஒன்றிய அரசு கூறி வரும் நிலையில், புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்கவிட்டாலும், இருக்கிற வேலை இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். மேட் இன் இந்தியா இனி சாத்தியமில்லை. மேட் இன் இந்தியாவை நீங்கள் அழித்துவிட்டீர்கள். சிறு, குறு தொழில்களை ஆதரிக்கவில்லையெனில் இனி மேட் இன் இந்தியா சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

சிறிய நடுத்தர தொழில்கள் மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேட் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்றவற்றைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கும் வேளையில் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது

பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி கொள்கை, கரோனா காலத்தில் எந்த உதவியும் செய்யப்படாதது போன்றவற்றால் இந்திய மக்கள் தொகையின் 84% பேர் வருமானம் குறைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது.

இவை நாங்கள் தயார் செய்த புள்ளிவிவரங்கள் அல்ல. இவை உண்மையான தரவுகள். இந்த 27 கோடி மக்களையும் நீங்கள் மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளீர்கள். இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், எரிவாயு விநியோகம், எதுவாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் அதானி என்றால் மறுபக்கம் அம்பானி. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்குப் பணம் அனைத்தும் செல்கிறது. துரதிர்ஷ்டவசமாக, குடியரசுத் தலைவர் உரையானது அரசாங்கம் செய்ததாகக் கூறும் விஷயங்களின் பட்டியலாகவே இருந்துள்ளது. அந்த உரையில் சிக்கல்களுக்கான தீர்வுகள் இல்லை. நம் நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை அது பேசவில்லை.

மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. இந்தியா மீது இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஓன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். பேச்சுவார்த்தை, உரையாடலில் சொல்வதென்றால் மாநிலங்கள் உடன் இணைந்த கூட்டணியே. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள்.

மாநில உரிமைகளைக் காப்பதில் மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்று ராகுல் காந்தி ஒன்றிய பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.