14 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கேரள பெண் தொழில் அதிபர் கொடுத்த புகாரில் கேரளாவில் உள்ள அமலாக்கத் துறையினர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ‌ஷர்மிளா. இவர் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் நகைக்கடை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

அந்த புகாரில், விஜயபாஸ்கரிடம் தொழில் ரீதியாக தொடர்பு இருந்து வந்தது. அவர் தன்னிடம் வாங்கிய ரூ.14 கோடி பணத்தில் ரூ.3 கோடியை மட்டும் திருப்பி தந்தார். மீதி பணத்தை திருப்பி தரவில்லை. அதனை கேட்டால் கொலை மிரட்டுகிறார். எனவே தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என ஷர்மிளா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே பெண் தொழில் அதிபர் ‌ஷர்மிளா கொடுத்த புகார் தொடர்பாக கேரளாவில் உள்ள அமலாக்க துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இந்த புகாரில் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தி பல ஆவணங்களையும் கைப்பற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.