பத்ம விருது பெற்றவர்களுக்கு திரையுலகினர் உட்பட பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன், பங்காரு அடிகளார், மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி  உள்ளிட்டோரின் பெயர்கள் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கையான நர்த்தகி நடராஜுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும்ன் வெளியிட்டுள்ள பதிவில், “பத்மஶ்ரீ சகோதரி நர்த்தகி நடராஜுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபனும் தனது வழக்கமான ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், “பத்மஸ்ரீ பெற்றுள்ள நண்பர் பிரபுதேவா,டிரம்ஸ் சிவமணி சின்னபுள்ளையம்மா -வாழ்த்துக்கள்! ஐஸ்வர்யாராய் உலக அழகியான போது நான் சின்னபுள்ளையம்மாவை இந்த பிரபஞ்ச அழகியாக அறிவித்து வருடத்திற்கு தேவையான புடவை பல பரிசுகளை ட்ரங்க் பெட்டியில் வழங்கி மகிழ்ந்தேன். பந்திக்கு பிந்து பாராட்ட முந்து”, எனக் கூறியுள்ளார்.

மேலும், பத்ம விருதுகள் வென்ற பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.