பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி திட்டம் போன்று மக்களுக்கு தீவிர பொருளாதார பிரச்னைகளை உருவாக்கும் விகாரங்கள் குறித்து மத்திய அரசை பொறுப்பேற்கச் செய்யாமல் மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) துறை ஒதுங்கி இருப்பது ஏன் என்று நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு (பிஏசி) தலைவரும், மக்களவை காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

கணக்கு தணிக்கையாளர் துறை சுதந்திரத்துடன் செயல்பட்டால்தான் அவர்களுக்கு உண்டான மாபெரும் கடமைகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58,000 கோடிக்கு ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கார்கே இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் 29-ஆவது கணக்கு தணிக்கைத் துறை மாநாடு, தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது ” மத்திய அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தும்போது, அதன் மூலமாக விளைந்த பலன்கள் என்ன என்பதை தெரிவிக்குமாறு யாரேனும் வற்புறுத்தாவிட்டால், அரசை அதன் தவறுகளுக்கு யாரும் பொறுப்பாக்க முடியாது. ஒரு திட்டம் தோல்வியடைவது அப்பட்டமாக தெரிந்த பிறகு, அரசு தனது இலக்கை மாற்றிக் கொள்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். உதாரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்தபோது, அரசு அத்திடத்துக்கான நோக்கத்தை மாற்றிக் கொண்டது. மத்திய கணக்கு தணிக்கைத் துறை ஆண்டுதோறும் 100 அறிக்கைகளை வெளியிடுகிறது. அதில் பெரும்பாலனவை குறைவான வரவேற்பையே பெறுகின்றன அல்லது அந்த அறிக்கைகள் அரசியல் நலன்களை பிரதிபலிப்பதாகவே உள்ளன.அரசமைப்புச் சட்டத்தின்படி உருவான அமைப்பு என்ற வகையில், அரசுப் பணியாளர்களின் நலன்களை காக்கும் வகையில் ஊகங்கள் அல்லது அனுமானத்தின் அடிப்படையில் சிஏஜி அறிக்கைகள் இருக்கக் கூடாது. ஜனரஞ்சகமான ஓர் அறிக்கை என்பது அந்த அமைப்புக்கு பெருமை சேர்ப்பதாகவும், மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும்.பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பெரிதும் பொருளாதார பிரச்னைகள் உருவாக்கிய திட்டங்கள் அல்லது பாதுகாப்புத் துறை திட்டங்கள் போன்று, பொது மக்களின் பணம் அதிகமாக செலவிடப்பட்ட திட்டங்கள் குறித்து, அரசை பொறுப்பேற்கச் செய்வதில் அரசமைப்பு அதிகாரிகள் (சிஏஜி) தோல்வி அடைந்திருப்பது குறித்து பொதுமக்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்றார் கார்கே.