ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்தனர். ஹாலிவுட் திரையுலகில் இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தியாவின் பல்வேறு திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை ஸ்ரீ ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட பிரபல நடிகைகள் எழுப்பி வரும் நிலையில், தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அது தொடர்பான ட்வீட்டை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தன் மீதான பாலியம் புகார் குறித்து வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும்” என தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதற்கு பாடகி சின்மயி அவர் ஒரு பொய்யர் என்று டுவீட் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் பாடகி சின்மயி. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த 2005 அல்லது 2006ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நாங்கள் சுவிட்சர்லாந்தில் கச்சேரிக்காக சென்றிருந்தோம். அப்போது நிகழ்ச்சி முடிந்த பிறகு அதன் ஒருங்கிணைப்பாளர் என்னையும், எனது அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார். மேலும் வைரமுத்து இருக்கும் ஹோட்டல் அறைக்கு செல்லுங்கள் என்றார். நாங்கள் முடியாது என்று கூறிவிட்டு, உடனே சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம். அதிலிருந்து தப்பித்த பிறகு வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மறுத்ததற்கு பிரபல அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி மிரட்டியதாகவும் பதிவிட்டிருந்தார்.

மேலும், இது போன்ற பல பெண்கள் வைரமுத்து பற்றி பேச முன்வருவார்கள். வைரமுத்துவின் அரசியல் பின்னணி, அதிகார பலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்” என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “கவிஞர் வைரமுத்துவை பல பெண்கள் வசைபாடுகின்றனர். ஒருவர் குறித்து பேசுவதற்கு முன், உண்மை தன்மையை ஆராய வேண்டும். சின்மயி போன்ற பிரபலங்கள், பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் குற்றம் சாட்டுபவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது பாராட்டிற்குரியது. இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சின்மயிக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, “எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு துர்க்கையின் தைரியம் இருக்கிறது. இது போன்ற நிலையில் வெளியே வந்ததுக்கு நன்றி. எல்லோரும் அவருடைய தைரியத்தை பாராட்ட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.