நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது, அது குறித்த தகவல்களை சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 10 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பில், “மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும்,

அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்துள்ளது.

அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் 14-06-2021 சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.ஜே.ராஜன்,

“நீட் தேர்வு குறித்த முக்கியமான தரவுகள் தேவைப்படுகின்றன. தமிழ் வழிக் கல்வி மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு செய்து தரவுகளின் வழி அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது, இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேரின் கருத்தும் நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது என்பது தான். அது குறித்த தகவல்களை சேகரித்து ஒரு மாதத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளோம்.

நீட் தேர்வால் எந்த அளவு பாதிப்பு உள்ளது என்பது குறித்து இறுதிகட்ட அறிக்கையில் கூறப்படும். அடுத்த கூட்டம் திங்கள் கிழமை கூடும் அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்