நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெறாவிட்டால் அமெரிக்காவுக்கு கெட்டது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டு காலத்தில் அவர் சந்தித்த பிரச்சினைகள் அவரை வெற்றி பெற முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனா உலக நாடுகளில் பரவிய போது பொருளாதாரம் தான் முக்கியம் என கருதி அமெரிக்காவில் லாக்டவுன் அமல்படுத்தாததால் இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.

மேலும் 40 மில்லியன் பேர் அமெரிக்காவில் வேலையை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும், எத்தனை பேர் இறந்தாலும் லாக்டவுனை நீக்குவேன் என டிரம்ப் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க: மீண்டும் புதிய வகை வைரஸ் பரவுகிறதா.. ‘போர்க்கால எமர்ஜென்சி’ அறிவித்த சீனா

இதற்கிடையே கடந்த 25-ஆம் தேதி மின்னபொலிஸ் மாகாணத்தில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டை விசாரணைக்கு அழைத்து சென்ற ஒரு போலீஸ் அதிகாரி அவரது கழுத்தில் காலால் நெரித்தே படுகொலை செய்தார். தொடர்ந்து கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடைபெறும் இந்த வன்முறைகளுக்கு நீதி கேட்டு அமெரிக்கா போராட்டக் களமாக மாறியது.

நிற பாகுபாடின்றி ஜார்ஜ் பிளாய்டுக்காக மக்கள் சாலையில் போராடினர். வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் துப்பாக்கியால் சுட உத்தரவிடுவேன் என டிரம்ப் எச்சரித்தார்.

டிரம்ப்ன் இந்த செயலுக்கு அமெரிக்க பிரபலங்கள் உட்பட பலரும் அதிபர் தேர்தலில் உங்களை வெளியேற்றுவதற்கேற்ப வாக்களிக்கிறோம் என்றனர். இதுபோல் அமெரிக்கர்களின் அதிருப்தியை பெற்ற டிரம்ப் இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், “நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும். ஒரு வேளை நான் வெற்றி பெறாவிட்டால் நீங்கள் போய் வேறு வேலை பார்ப்பது தான். நான் தோல்வி அடைந்தால் நாட்டிற்கு மிகவும் கெடுதல் ஆகும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.