நாடாளுமன்றத்தில் போதுமான விவாதங்கள் இன்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லியில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

பின்னர் பேசிய என்.வி.ரமணா, “நாடாளுமன்றத்தில் முன்பெல்லாம் மசோதாக்கள் குறித்து விரிவான ஆழமான விவாதங்கள் நடைபெறும். இதனால் நீதிமன்றங்களின் தலையீடு குறைவாக இருக்கும். ஆனால், தற்பொழுது மசோதாக்கள் உருவாக்குவதில் தெளிவு இல்லை.

சட்டத்திருத்தங்கள் மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பயன்படுத்தப்பட வேண்டும். துரதிர்ஷ்டம், நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பதற்கு பதிலாக இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். இது வேதனை அளிக்கின்றது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றம்போது போதுமான அளவு விவாதங்கள் நடத்தாதபோது, அந்த சட்டத்தில் பெரிய இடைவெளியும், குழப்பமான சூழலும் ஏற்படுகிறது. ஏன் இத்தகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை.

இதன் விளைவுகள் மக்களுக்கு பெரும் இடர்பாடுகளை ஏற்படுத்தும். சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெறாதபோது இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கும். நாடு சுதந்திரம் அடைந்து முதன்முதலில் மக்களவை, மாநிலங்களவை அமைக்கப்பட்டபோது, அதில் இடம் பெற்றவர்கள் பெரும்பாலும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள்.

நாட்டின் நீண்ட சுதந்திரப் போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள் தான் தலைமை வகித்துள்ளனர். மகாத்மா காந்தி, பாபு ராஜேந்திர பிரசாத் என சட்டம் பயின்ற பலர் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளனர். அவர்களின் சொத்துக்கள்,குடும்ப வாழ்க்கை அனைத்தையும் தேசத்துக்காக தியாகம் செய்துள்ளனர்.

வழக்கறிஞர்கள் தங்கள் பணியையும், தங்களையும் எல்லைக்குள் வைக்காதீர்கள். நன்றாக பணம் ஈட்டுங்கள், வசதியாக வாழுங்கள். அதற்கு மேலும் சிந்தியுங்கள். பொது வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும், சிறந்த சேவைகளை வழங்கி, அந்த அனுபவத்தை தேசத்துக்கு வழங்கிட வேண்டும். நல்ல விஷயங்கள் வெளிவரும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்த அமளிக்கு மத்தியில் ஒன்றிய பாஜக அரசு முக்கிய மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ராஜினாமா மோடி’- சுதந்திர தினத்தில் பிரதமருக்கு எதிராக லண்டனில் ஒலித்த குரல்!