ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ வலியுறுத்தி உள்ளார்.

நாகாலாந்து மாநிலத்தில் உளவுத்துறை அளித்த தவறான தகவலால் பொதுமக்களை பயங்கரவாதிகள் எனக் கருதி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலைக்கு ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் நாகாலாந்து மாநில அரசும் உயர் மட்ட குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மோன் மாவட்டத்தில் உள்ள திஜித் காவல் நிலையத்தில் இந்திய ராணுவத்தின் ‘பாரா’ சிறப்புப் படையினர் மீது நாகாலாந்து மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் அமலாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோன் மாவட்டத்துக்கு இன்று (6.12.2021) நேரில் சென்ற முதலமைச்சர் நெய்ப்யூ ரியோ, “பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 14 அப்பாவி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். மேலும் 14 பேரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் நெய்ப்யூ ரியோ, ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்குகிற AFSPA சட்டத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தான் ஆயுதப் படையினருக்கான சிறப்பு சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். நாகாலாந்து மாநிலத்தில் ஏன் இச்சட்டம் அமலில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயல்களை தடுக்கும் வகையில் மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) அமல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த சட்டம் ஜம்மு காஷ்மீரிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து ஆயுதப்படையினர் ரோந்து நடந்த அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற அப்பாவி பொதுமக்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்படும் போது சிறப்பு அதிகாரம் வழங்குகிற சட்டம் ராணுவத்தினரை பாதுகாக்கிறது என்பது மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகவும் உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் நாகாலாந்து விவகாரம் எதிரொலித்துள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி அமளி நிலவியதால், இருஅவைகளும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.