நக்கீரன் கோபாலை ஐபிசி 124-வது பிரிவின் கீழ் கைது செய்தது செல்லாது என சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கூறியுள்ள நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்க கோரிய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.

அடிப்படை ஆதாரமற்ற வகையில் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதி கூறியுள்ளார். எனவே கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்கள் திரும்ப திரும்ப கூறிய வாதத்தை ஏற்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக மறுத்து விட்டார்

இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் பேசிய கோபால் தரப்பு வழக்கறிஞர், ஆளுநருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கோபால் மீதான புகாரில் கூறப்படவில்லை. கோபால் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் ஏதும் கூறவில்லை. நேரடியாக ஆளுநரின் பணியை கோபால் அவர்கள் தடுக்கவில்லை என கூறி வாதிட்டதாக கூறினார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதித்துறை நின்றுள்ளதாக குறிப்பிட்டார். திறமையாக வாதாடிய வழக்கறிஞர்கள் மற்றும் இந்து என்.ராமுக்கும், தம்மை வந்து நேரில் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.

முன்னதாக மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆளுநரின் தனி செயலாளர் அளித்த புகாரின் பேரில், புனே செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரித்தார். காலை 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நக்கீரன் கோபால் மீது சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் 124-A பிரிவில் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது.

தொடர்ந்து விசாரணை நடத்திய பின் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கோபாலுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கோபால் சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினர் கோபால் மீது பதிவு செய்த வழக்கின் பிரிவை செல்லாது என அறிவித்து, அவரை சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.