இந்திய கிரிக்கெட் அணி தோனியை தாண்டி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பல சாதனைகளை படைத்தது. இந்நிலையில் தற்போதைய போட்டிகளில் தோனியின் ஆமைவேக பேட்டிங் காரணமாக, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் கடைசியாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு பின் 2 மாதம் ஓய்வில் இருந்த தோனி, அந்த ஓய்வு காலத்துக்கு பின்னும், இந்திய அணியில் இடம் பெறவில்லை.

அடுத்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு, தோனியை புறக்கணித்த இந்திய தேர்வுக்குழுவினர், இளம் ரிஷப் பந்த்துக்கு அதிகவாய்ப்பு வழங்கப்படும் என வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

இதையடுத்து தோனி ஓய்வு பெற வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனி வழக்கம் போல மௌனம் காத்துவருகிறார். இந்நிலையில் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தோனி தானாக வெளியே சென்றால் நல்லது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், “தோனி மனதில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவரின் எதிர்காலம் குறித்து தெளிவுபடுத்த வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. என்னைப்பொறுத்தவரையில் தற்போது தோனிக்கு 38 வயதாகிறது.

அடுத்த டி-20 உல கக்கோப்பை தொடரின் போது அவருக்கு 39 வயதாகிவிடும். அதனால் இந்திய அணி அவரைத்தாண்டி சிந்திக்க சரியான நேரமிது. நெருக்கடிக்கு ஆளாகி வெளியேறுவதற்கு பதிலாக தானாக முன்வந்து வெளியேறுவது தோனிக்கு நல்லது.

கோடிக்கணக்கான ரசிகர்களைப்போல நானும் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவர் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது . தோனி பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல், ஸ்டெம்பிங், களத்தில் அசத்தல் சிந்தனை என அனைத்தும் கேப்டனுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால் அவரின் ஓய்வுக்கு காலம் வந்துவிட்டதாகவே தெரிகிறது” என்றார்.