திஷா ரவியை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், திஷா ரவி வழக்கில் ஊடகங்களுக்கு தகவல்களை கசியவிடக்கூடாது என்றும் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரும் விவசாயிகள் போராட்டம் தொடர்புடைய சில தொகுக்கப்பட்ட சர்ச்சை ஆவணங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய விவகாரத்தில் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவி கடந்த சில தினங்கள் முன்பு டெல்லி சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நடுவர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஆகாஷ் ஜெயின் முன்னிலையில், திஷா ரவி இன்று (பிப்ரவரி 19) ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணையில், “தற்போதைய நிலையில், திஷா ரவிக்கு தொடர்ந்து போலீஸ் காவல் தேவையில்லை. அவருடன் சேர்த்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாந்தனு முகுல், நிகிதா ஜேக்கப் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும்போது திஷாவிடமும் விசாரணை நடத்த வேண்டிய தேவை எழும்” என்று காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட கூடுதல் நீதிபதி ஆகாஷ் ஜெயின், திஷா ரவியை மூன்று நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திஷா ரவி, விசாரணை விவரங்களை யாருக்கும் கசியவிடக்கூடாது என்று டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது தனிப்பட்ட உரையாடல் குறித்த தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 19) விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி காவல்துறை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் திஷா ரவி சம்பந்தப்பட்ட விசாரணை விவரங்கள் எதையும் காவல்துறை கசியவிடவில்லை என்றும், மனுதாரர் தவறான தகவலை கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எதிர்மனுதாரர்கள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், டெல்லி காவல்துறை விசாரணை விவரங்களை கசியவிடக்கூடாது என்றும், பிரமாண பத்திரத்தில் கூறியதை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது. மனுதாரரின் தனியுரிமைக்கான உரிமை, பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவி கைதுக்கு வலுக்கும் கண்டனங்கள்