கேளிக்கை சினிமா தமிழ்நாடு

திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி; தமிழக அரசு திடீர் பல்டி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, திரையரங்குகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளித்ததை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 4.1.2021 அன்று, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100% இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையினை பரிசீலனை செய்து, 100% இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு மாண்பமை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது. கொரோனா நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொது மக்களின் நலன் கருதி, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100% இருக்கைகளுக்கு அனுமதி: தமிழக அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் தடை

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.