குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், சிஏஏ-க்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளது

அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகின்ற மதச்சார்பற்ற-வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற இந்திய ஒன்றியம் நிலைத்துச் செழிக்க, மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஒரு கோடி கையொப்பம் பெற வேண்டும் என்று கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த 24ஆம் தேதியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், சிஏஏ-க்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் “கையெழுத்து இயக்கம்” நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளட அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சியினரும் நடத்துகின்ற கையெழுத்து இயக்கம் என்பது நீதிக்கான நெடும்பயணம்.

கழகத்தின் நிர்வாகிகள் அதனை உணர்ந்து, மாவட்டந்தோறும் கையெழுத்து இயக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றால் விளையக்கூடிய அபாயங்களையும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக அவை இருப்பதையும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைப்பதையும் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் போல விளக்கிட வேண்டும்.

நீங்கள் சந்திக்கப் போகும் மக்கள் ஒவ்வொருவரும் அதனைப் புரிந்துகொண்டு, மனதார கையெழுத்திட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். இது போலிக் கணக்குக் காட்டும் ‘மிஸ்டு கால்’ இயக்கமல்ல. மக்கள் தங்கள் உள்ளத்து உண்மை உணர்வை கையெழுத்தாக வெளிப்படுத்துகின்ற இயக்கம்.

தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்தினைப் பெறுவது என்பதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. பிப்ரவரி 2 முதல் 8 வரை இந்தப் பயணம் வீடு வீடாகத் தொடர்ந்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்.

ஒரு கோடி மக்கள் கையெழுத்து இயக்கம், பல கோடிகளாக பெருகட்டும். நாட்டைப் பிளவுபடுத்தும் கொடிய சட்ட திட்டங்களுக்கு எதிரான உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகின்ற மதச்சார்பற்ற-வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற இந்திய ஒன்றியம் நிலைத்துச் செழிக்கட்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது, திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தை தலைவர்கள் தொடங்கி வைக்கும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆவடியில், காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, சென்னை துறைமுகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.