திமுகவுக்கு ஆதரவாக கோவையில் தேர்தல் பிரசாரம் செய்த ருமேனிய தொழிலதிபர் ஸ்டீபன் நெகொய்டாவுக்கு குடியுரிமை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஸ்டீபன் நெகொய்டா. இவர் வியாபாரம் சம்பந்தமாக வணிக விசாவில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். இவரது வியாபார நண்பர் கோவையில் இருப்பதால், ஸ்டீபன் நெகொய்டா கோவை சென்றுள்ளார்.

கோவையில் பேருந்தில் ஸ்டீபன் நெகொய்டா சென்றபோது பெண்கள் இலவசமாக பயணம் செய்வதை கண்டு ஆச்சரியமடைந்தார். திமுக அரசின் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தால் அவர் கவரப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ஸ்டீபன் நெகொய்டா திமுகவுக்கு ஆதரவாக உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்தார். அவர் பஸ்சிலும், மோட்டார் சைக்கிளிலும் பயணம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். துண்டு பிரசுரம் கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக ஸ்டீபன் நெகொய்டா கூறும்போது, “திமுக அரசின் மக்கள் நல திட்டங்களால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாகவும் தெரிவித்தார். நேற்று முன்தினம் மட்டும் ஸ்டீபன் நெகொய்டா ஒரு நாள் பிரசாரம் செய்தார்.

ருமேனியா நாட்டைச் சேர்ந்த நபர் கோவை மக்களிடையே திமுகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்டதன் மூலம் ஸ்டீபன் நெகொய்டா விசா விதிமுறைகளை மீறியதாகக் கூறி, குடியுரிமை அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசில், “நீங்கள் வந்த நோக்கத்தை விட்டு வேறு செயல்களில் (அரசியல் பிரசாரம்) ஈடுபட்டு உள்ளீர்கள். இதனால் விசா விதிமுறைகளை மீறி விட்டீர்கள்.

வணிக விசா வைத்திருக்கும் நீங்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் இன்று (18.2.2022) ஆஜராக வேண்டும். ஆஜராக தவறினால் 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டப்பிரிவு 14-ன் கீழ் வழக்குத் தொடரப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் நெகொய்டாவின், விசாவை ரத்து செய்து ருமேனியாவிற்கு திருப்பி அனுப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.