ஆன்மிகம் சமூகம் தமிழ்நாடு திமுக பெண்கள்

தமிழ்நாட்டில் பெண்களும் அர்ச்சகர் ஆக சிறப்பு பயிற்சி- அமைச்சர் சேகர்பாபு

அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் ஆவணங்கள் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்டன. மேலும் முதற்கட்டமாக கடந்த வாரம் சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் 12-6-2021 செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கும் அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அதற்கான பயிற்சியை அரசு தொடர்ந்து வழங்கும். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர் மற்றும் தொடர்பு எண் கொண்ட பலகை வைக்கப்படும்.

எந்தெந்தக் கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறை இருக்கிறதோ, அங்கெல்லாம் உடனே காலியிடங்கள் நிவர்த்தி செய்யப்படும்.

திருக்கோயில் பணியாளர்களை நேரடியாக அரசு விளம்பரம் செய்து பணியிடங்களை நிரப்புவது, அரசு தேர்வாணையம் மூலம் பணியாளர்களை நியமிப்பது, பணி நிரந்தரம் செய்யப்படவேண்டியவர்கள் எவ்வளவு நபர்கள் என்பது குறித்து விரைவாக ஆலோசித்து காலியிடங்களை நிரப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.

கொரோனா தொற்று காரணமாக சில கோயில்களில் நான்கு கால பூசை, ஒரு கால பூசை மட்டுமே நடைபெறுகிறது. கொரோனா பரவல் குறைவதை பொறுத்து, கொரோனா சோதனை செய்து அர்ச்சகர்கள் முழுமையாக பணியாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ், அடுத்த 100 நாட்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 30 கோயில் யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் மதம் சார்ந்த விஷயங்களில் யாருடைய மனமும் புண்படக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், திருச்சி ஜீயர் நியமனத்திலும் தொடர்ந்து எந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததோ, அதே நடைமுறையை பின்பற்றப்படும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.