மத்திய அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் மத்திய பாஜக அரசின் பல்வேறு இடர்பாடுகளையும் தாண்டி 6 வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கடும் குளிரையும், பணியையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் சாலைகளில் சமைத்து உண்டு, உறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 01) பிற்பகல் 3 மணியளவில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்று, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தனர்.

வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் 32 விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டம் தோல்வியில் முடிந்தது. விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஆராய குழு ஒன்றை அமைப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெரும் வரை போராட்டம் தொடரும் என்பதில் உறுதியாக உள்ளதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மத்திய பாஜக அரசு அதிருப்தி அடைந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து அனைத்திந்திய விவசாய கூட்டமைப்பின் தலைவர் பிரேம் சிங் கூறும்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். டிசம்பர் 3 ஆம் தேதி அரசுடன் நடைபெறவுள்ள அடுத்த பேச்சுவார்த்தையின் போது, வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. லோக்சபா, ராஜ்யசபாவில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமருக்கு மத்திய அரசு கண்டனம்