அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது தலைநகர் டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் செல்லும் வழியில் மற்றொரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின.

வன்முறை குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், இரு தரப்பையும் கலைந்து போக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர்கள் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டது. அத்துடன் போலீசாரின் வாகனம் உள்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அத்துடன் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இந்த பயங்கர வன்முறை சம்பவத்தில் 8 போலீசார் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அத்துடன் ஏராளமான பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன.

வன்முறையால் தலைநகர் டெல்லியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் சம்பவ இடத்தில் பதற்றத்தை தணிக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு, ரோந்து, டிரோன் கேமரா கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அன்சர் ஷேக், உள்பட 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 2 பேர் சிறுவர்கள். இந்நிலையில், அன்சர் ஷேக் உள்பட கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் ஒருவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு வருடம் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜஹாங்கிர்புரியில் உள்ள ஒரு மசூதியில் சிலர் காவி கொடியை ஏற்ற முயன்றதாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் கல்வீச்சு மற்றும் வன்முறை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதை மறுத்துள்ள டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா, அத்தகைய முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை மோதலில் ஈடுபடுபவர்கள் எந்த மதம் என்று பாராமல் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.