மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், திட்டமிட்டபடி 72வது குடியரசு தினமான இன்று (ஜனவரி 26) டெல்லியில் டிராக்டர் பேரணியை தொடங்கி உள்ளனர்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிசா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 62வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு ஏற்க மறுத்ததால், 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இருப்பினும் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.

தொடர்ந்து பல்வேறு வகையில் போராட்டங்களில் ஈடுபட்டும் விவசாயிகள், 72அது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாக அறிவித்தனர்.

அந்த வகையில், இன்று காலை முதலே டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக டெல்லியின் எல்லைக்குள் லட்சக்கணக்கான விவசாயிகள் தேசியக் கொடிகளை ஏந்தியபடி சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் பேரணி கன்ஜாவாலா , பவானா , அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும். அதேபோல் திக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி நாக்லோ , நஜாப்கர் , மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும்.

மூன்றாவதாக டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி , காஜியாபாத் , பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும்.

பேரணியில் பங்கேற்க டெல்லியின் திக்ரி மற்றும் சிங்கு எல்லை வழியாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களில் வந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணி மேற்கொள்வதால் மாநில எல்லைகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி உறுதி- விவசாயிகள்