அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என கலிபோர்னியா மாகாண கவர்னர் தெரிவித்தார். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் அம்மாகாண கவர்னர் மே 8 ஆம் தேதி வாக்குரிமை உள்ளவர்களுக்கு ஓட்டுச்சீட்டுகளை அனுப்ப உத்தரவிட்டார்.

இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தபால் ஓட்டுச்சீட்டுகள் மூலம் மோசடி நிகழலாம்; கலிபோர்னியா அரசு வாக்குரிமை இல்லாதவர்களுக்கும் ஓட்டுச் சீட்டுகளை வழங்குகிறது, என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க தனியார் நாளிதழ்கள் பொய்யானது என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டின.

இதன் அடிப்படையில் ட்விட்டர் நிறுவனம், ட்ரம்ப் பதிவிட்ட கருத்துப் ஆதாரமற்றது எனக்கூறியது. இதுகுறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிறுவனம், ட்ரம்பின் பதிவு, எங்களின் விதிமுறைகளை மீறாவிட்டாலும், பதிவிட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கிலேயே, நாளிதழ்கள் வெளியிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் போலியானது என ட்விட்டர் கூறியுள்ளது.

அதிபர் ட்ரம்பின் இரண்டு பதிவுகளை தவறானவை என்று ட்விட்டர் சுட்டிக் காட்டியதையடுத்து ட்ரம்ப் அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே சர்ச்சை உருவானது. இதனையடுத்து அமெரிக்க அரசியலில் ட்விட்டர் நிறுவனம் தலையிடுகிறது, அதிபராக நான் இதனை அனுமதிக்க முடியாது என ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

மேலும் வாசிக்க: நேபாளம், சீனாவைத் தொடர்ந்து மோடி அரசின் மீது குற்றம் சாட்டும் பாகிஸ்தான்

தமது பதிவுகள் தவறாக வழிகாட்டுபவை எனக் கூறிய ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குத் தொடரப் போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் சமூக ஊடகங்களுக்கு அளித்துவரும் விளம்பரங்களை குறைக்குமாறும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களை வரைமுறைப்படுத்தும் புதிய சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு கிடைக்கும் . கையெழுத்திட்ட பின்னர் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவின் சுதந்திரமான பேச்சுக்கு உள்ள ஆபத்துகளை நீக்கவே இந்த உத்தரவு என்று விளக்கம் அளித்துள்ளார்.