முதற்கட்டமாக டெல்லி, மும்பை உள்பட 4 நகரங்களில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சில்லறை பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 1 ஆம் தேதி ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இந்த டிஜிட்டல் ரூபாய் நாணயம் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளுக்கு கீழே வரும். டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்துவது முற்றிலும் சட்ட ரீதியானது. இந்திய அரசும் டிஜிட்டல் ரூபாயை ஏற்கும்.

டிஜிட்டல் ரூபாய் நாணயம் முதற்கட்டமாக நவம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டபோது, மொத்த பரிவர்த்தனைகளுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டது. அப்போது எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் மஹிந்த்ரா பேங்க், யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்எஸ்பிசி ஆகிய ஒன்பது வங்கிகள் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகளை அரசு பத்திரங்களை வர்த்தகம் செய்வதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்தது.

இந்நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சில்லறை பரிவர்த்தனைகளுக்கும் புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் சோதனை முறையில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சில்லறை பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் ரூபாய் சேவை பெறலாம்.

அதன்பிறகு அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய இடங்களில் விரிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் ஆகிய 4 வங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் குறிப்பிட்ட சில கிளைகளில் மட்டுமே கிடைக்கும்.

தேவைக்கேற்ப டிஜிட்டல் ரூபாயை விரிவுப்படுத்துவதற்காக பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கேட்டாக் மகேந்திரா வங்கி ஆகிய இன்னும் சில வங்கிகள் விரைவில் இணைக்கப்படும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு நபர் மற்றொரு நபருக்கும், ஒரு நபர் ஒரு வர்த்தகருக்கும் என இரண்டு வகையான பரிவர்த்தனைகளும் சோதனை செய்யப்பட இருக்கின்றன. டிஜிட்டல் வாலட்டுகள் வழியாக டிஜிட்டல் ரூபாயை பரிவர்த்தனை செய்யலாம். வர்த்தகர்களிடம் கட்டணம் செலுத்த QR code பயன்படுத்தப்படும்.

சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டினால் எதாவது சிக்கல் உள்ள என்பதை ஆராய்ந்து அதை சரி செய்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் டிஜிட்டல் ரூபாய் என்பது ரொக்கத்தை போலவே பாதுகாப்பானதும், நம்பத்தகுந்ததும் ஆகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.